பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்’ என்னும் இராஜயோக தியான நிலையத்தின் சிறு விதை 1936-ஆம் ஆண்டு சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாத்தில் (கராச்சி) விதைக்கப்பட்டு, இன்று மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து, சுமார் 8,500 கிளை நிலையங்களைக் கொண்டிருக்கிறது.  பிரம்மா குமாரிகள் அமைப்பானது ஓர் ஆன்மிக, சமூக, கல்வி மற்றும் கலாச்சாரப் பணிபுரிந்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்கால இயந்திரமயமான உலகத்தில், புதிய ஆன்மிக விழிப்புணர்விற்கான பணியைச் செய்து வருகிறது இந்த இயக்கம்.ஆரம்ப கட்டத்தில் சுமார் 350 பேர் கொண்ட ஓர் சிறிய ஆன்மிக விழிப்புணர்வு பெற்ற குடும்பமாகச் செயல்பட்டு வந்த இந்த இயக்கம், இன்று சுமார் ஒரு மில்லியன் உறுப்பினர்களுடன் விளங்குகிறது. சாதி, சமயம், இனம், மொழி, கலாச்சாரத்தைக் கடந்து, பண்புகள் நிறைந்த வாழ்க்கையின் வாயிலாக உலகத்தில் தூய்மை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பரப்பும் ஆன்மிகப் பணியில் இவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.  

 

இவ்வியக்கம் தாதா லேக்ராஜ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் பிரபல வைர வியாபாரியாக விளங்கினார். சிவ பெருமானின் அருளால் கிடைத்த பல்வேறு தெய்வீகக் காட்சிகளும், ஆன்மிக அனுபவங்களும் அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஓர் ஆன்மிக முன்னோடியாக உருவெடுத்தார். இவரை மக்கள் “பிரஜா பிதா பிரம்மா’ என்று அழைத்தனர். இவர் தனது 60-ஆவது வயதில், 1936-ஆம் ஆண்டு “ஓம் மண்டலி’ என்ற ஆன்மிக அமைப்பை நிறுவினார். அதன் பின்னர் “பிரம்மா பாபா’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். 

1950-ஆம் ஆண்டு, 350 பேர் கொண்ட இவரின் ஆன்மிகக் குழு கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து, ராஜஸ்தானில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள “மவுண்ட் அபு’ என்னும் இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. பிரஜா பிதா பிரம்மா தீர்க்கமான நம்பிக்கையும், தொலைநோக்குச் சிந்தனையும் கொண்டவராக இருந்ததால், 1971-ல் ஆரம்பிக்கப்பட்ட அகில உலக சேவையானது, இன்று ஐந்து கண்டங்களிலுள்ள 110ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆன்மிகம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில், தமது தனித்தன்மை வாய்ந்த பண்புகளால் மறுமலர்ச்சி ஏற்படுத்த வல்லவர்கள் பெண்களும் தாய்மார்களுமே என்பதை உணர்ந்து, அவர்களை முன்னிலைப்படுத்தினார். அதன்படி “மாதேஸ்வரி ஜெகதாம்பா சரஸ்வதி’ பிரம்மா குமாரிகளின் முதல் நிர்வாகியானார். அந்த சமயத்தில் இளம் வயதுடையவராக இருந்த போதிலும் ஆன்மிகத் தாயாக விளங்கினார். பாரதத்தின் பல பாகங்களிலும் தனது பணியை மேற்கொண்ட மாதேஸ்வரி, 1964-ஆம் ஆண்டு தனது பூத உடலை நீத்தார். அதன் பின்பு பிரஜா பிதா பிரம்மா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 18-ல் பரிபூரண நிலையைப் பெற்றவராக பூதவுடலை நீத்தார். 

இவர்களைத் தொடர்ந்து ஆன்மிக சேவையானது மூத்த சகோதரிகளால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தது. அன்பு சொரூபமும், தலைசிறந்த நிர்வாகியுமான “தாதி பிரகாஷ்மணி’ தலைமை நிர்வாகியாக 1969-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.இவருடைய ஆர்வம், உற்சாகம், இறைசக்தி, பண்புகளால் ஆன்மிகக் குடும்பத்தைச் செம்மையாக வழிநடத்தினார். அதன் பயனாக 1981 மற்றும் 1986-ல் ஐ.நா. சார்பாக அமைதிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1987-ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலர், இவருக்கு “அமைதித் தூதுவர்’ என்ற விருது வழங்கி கௌரவித்தார். இத்துடன் ஐந்து தேசிய “அமைதித் தூதுவர்’ விருதுகளை இவ்வித்யாலயத்தின் கிளை நிலையங்களான ஆஸ்திரேலியா மற்றும் கென்யா நாட்டு மையங்கள் பெற்றிருக்கின்றன. இராஜஸ்தான், உதயப்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர் (கௌரவ முனைவர்) பட்டத்தை தாதி பிரகாஷ் மணி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தாதி பிரகாஷ்மணி 2007-ஆம் ஆண்டு பூதவுடலைத் துறந்தார். அதன் பின்னர் தாதி ஜானகி அவர்கள் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். 100 வயது நிரம்பியவராக இருப்பினும், காலத்தையும் உடல் நிலையையும் கடந்து, களைப்பில்லாத சேவையை லட்சக்கணக்கான மக்களுக்கு ஆற்றி வந்தார்.

பிரம்மா குமாரிகள் வித்யாலயம் பலவிதத்தில் ஒரு ஈடுஇணையற்ற விஷ்வ வித்யாலயமாக உள்ளது. ஆன்மிகப் பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற சிறந்த ஆன்மிகக் கல்வி நிறுவனமாக இது விளங்குகிறது. இதற்குப் பன்னாடுகளின் வரவேற்பும் அங்கீகாரமும் உண்டு. ஐ.நா.சபையின் பொதுச் செய்தி இலாகாவில் அரசு சார்பற்ற நிறுவனமாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. சபையின் பொருளாதார- சமூகக் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவில் ஆலோசகர் அந்தஸ்தில் இடம் பெற்றுள்ளது. கோஸ்டாரிக்காவில் உள்ள ஐ.நா.வின் அமைதிப் பல்கலைக் கழகத்திற்கு, அமைதி பற்றிய கல்வி நுணுக்கத்தின் ஒத்துழைப்பை நல்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதிக் கழகத்தில் ஆலோசகர் அந்தஸ்து பெற்றுள்ளது.  மொரீஷியஸ் அரசு, இவ்வித்யாலயத்தை ஒரு பல்கலைக் கழகமாக, பாராளுமன்றச் சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளது. இந்த ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் ஆலோசனையின் பேரில், கயானா அரசு மூன்று நிமிட இராஜயோக தியானம் செய்து பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள இவ்வித்யாலயம் சமூகத்தின் 20 பிரிவுகளின் அடிப்படையில் தனது பணிகளை அதிகரித்து வருகிறது. அவற்றுள் மருத்துவப் பிரிவு, கல்விப்பிரிவு, மகளிர் பிரிவு, நிர்வாகப் பிரிவு, இளைஞர் பிரிவு, அரசியல் பிரிவு முக்கியமானவை. தனி மனிதனின் ஆக்கப்பூர்வமான மாற்றம்தான் அமைதி, மகிழ்ச்சியின் அடித்தளம் எனவும்; அதுவே உலக மாற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிறது என்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், தனிமனித அமைதிக்காக ராஜயோக தியானப் பயிற்சியைக் கற்பித்து வருகிறது.

இதைப் பற்றி அறிய வேண்டும் என்று விழைகின்ற ஆண், பெண், குழந்தைகள் யாவரும், ஜாதி, மத, மொழி பேதமின்றி இவ்வமைப்பை அணுகலாம்; அறிந்து பயனடையலாம். இதற்காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப் படுவதில்லை.பிரம்மா குமாரிகளின் இராஜயோக தியான மையங்களில் பல்வேறு பாடமுறைகள், உரையாடல், கருத்தரங்கம் மூலமாக, தனிமனித ஒழுக்க மேம்பாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலமாக மனதை எவ்வாறு சீராகப் பராமரித்து ஒருமுகப்படுத்துவது, மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு எவ்வாறு வாழ்வது, சுய நிர்வாகத் தலைமை, முழு ஆரோக்கியத்திற்கான ஆக்கப்பூர்வ அணுகுமுறை, நற்பண்புகள் கல்வித் திட்டம் போன்றவை அவற்றுள் சில.

இங்கு கற்றுத் தரப்படும் இராஜயோக தியானப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெற உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, வெற்றி அடைவதற்கான மனோசக்தியும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. கூடவே தன்னைத்தானே உணரவும் முடிகிறது. எப்பொழுது தன்னைப் புரிந்துகொள்கிறோமோ அப்பொழுதுதான் மற்றவர்களை- பிரச்சினைகளை- சூழ்நிலைகளைச் சரியாகக் கையாள முடியும்.இந்த ஆன்மிகப் பயணத்தில் உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஈடுபடுத்தும் வண்ணம், அநேக நிகழ்ச்சிகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்திலும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் கிளைகள் உள்ளன. இங்கே தினமும் காலை, மாலை இருவேளையும் இராஜயோகப் பயிற்சியும் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.