இராஜயோக தியானம்

உடல் மற்றும் மனதின் சக்தியை வளர்ப்பதற்கான ஒரு சிந்தனைப் பயிற்சியே தியானமாகும். இந்த நவீன உலகில், வாழ்க்கை அதிவேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது. நமது இயல்பான அமைதி, நமது உண்மையான சக்தியுடன் நம் தொடர்பை இழந்து கொண்டிருக்கிறோம். பல திசைகளில் நாம் தள்ளப்பட்டு இழுக்கப்படுவதை இந்நிலையில் அனுபவிக்க முடியும். இந்த கட்டத்தில்தான் நாம் மன அழுத்தத்தையும், சிக்கிக்கொண்ட ஒரு உணர்வையும் அனுபவிக்க ஆரம்பிக்கிறோம். படிப்படியாக, காலப்போக்கில், இந்த உணர்வு மன உளைச்சல் மற்றும் நோய்க்கு வழிவகுக்கிறது. ஏனெனில் நமது மன ஆரோக்கியம், உளநல ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் சமநிலையிலிருந்து மாறுபடுகிறது. நாம் யார் என்று உணர்ந்து, எல்லோருக்கும் தந்தையான இறைவன் யார் என்று தெரிந்து அவரை மனதால் அன்போடு நினைவு செய்வது தான் இராஜயோக தியனமாகும். இது சாதி, சமய, இனம், மொழி, ஏழை-பணக்காரர், ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் கற்க தகுந்த ஒரு எளிமையான தியான முறையாகும். இதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியாக வாழும் கலையைக் கற்றுக் கொள்ள முடியும்.

இராஜயோகப் பயிற்சியின் நன்மைகள்

கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவைகளிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற இந்த தியானம் உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து வெற்றி அடைய மனோ பலமும், தன்னம்பிக்கையும் இந்த தியானத்தின் மூலம் அடைய முடியும். கவலைகள் மறந்து ஆனந்தக் கடலில் மூழ்க இயலும். எண்ணம், சொல், செயலின் ஒருமைப்பாட்டின் காரணமாக காரியங்களில் செயல் திறனை அதிகரிக்க முடியும்.

மேலும், ஞாபக சக்தி, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், பரந்த மனப்பான்மை, மன ஒருமைப்பாடு, மன அடக்கம் ஆகியவற்றை இந்த யோகத்தின் மூலம் எளிதில் அடையலாம்.  முறையான இராஜயோக பயிற்சி மூலம் ஒருவரிடத்தில் நேர்மை, பணிவு, அமைதி, பொறுமை, சுதந்திரம், மகிழ்ச்சி, எளிமை, ஒற்றுமை, ஒத்துழைப்பு, அன்பு, மரியாதை, பொறுப்பு, பயமின்மை போன்ற நற்பண்புகள் வளர்கின்றன.