இராஜயோகத்தின் அடிப்படைவிதிகள்

சம்பூர்ண நிலையை அடைவதற்கும் ஆத்மீகத்தில் விரைவில் முன்னேறுவதற்கும் இராஜயோகத்தைத் தினந்தோறும் செய்து பழக வேண்டும். ஒவ்வொரு வேலையைச் செய்யும் போதும் பரமாத்மாவின் நினைவிலேயே செய்ய வேண்டும். 

இடைவிடாமல் இறைவனை நினைப்பதால் பயன் அதிகமாகக் கிடைப்பினும், உயர்ந்த நிலையை அடைய முக்கியமாக நேரம் செலவிட்டு அமர்ந்து யோகம் செய்ய வேண்டும். பரமாத்மாவை நினைக்கும் சமயத்தில் நாம் நம்முடைய புத்தியை ஒருமுகப்படுத்தி ஜோதிபிந்து சொரூபமான பரமாத்மாவிடம் நிலைக்கச் செய்ய வேண்டும். மனம் சஞ்சலப்படுவதால் காமம், குரோதம், மோகம், பேராசை, அகங்காரம் மற்றும்  குருமார்களையும் நாடுகிறது. பரமாத்மாவிடம் மட்டுமே மனதை செலுத்த பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். தேகத்தையும், தேக சம்பந்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு ஆத்ம சொரூபத்தில் நிலைத்து புத்தியை ஜோதிபிந்து பரமாத்மா சிவபெருமானுடைய அன்பு நினைவில் நிலை நிறுத்துவதுதான் உண்மையில் யோகமாகும்.

யோகம் செய்வது மிகவும் கஷ்டம் என்று சிலர் நினைக்கிறார்கள். பலர் ஹடயோகங்களையும், தவத்தையும், பிராணாயாமத்தையும் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் யோகம் என்பது மிக எளிது. ஒரு பிள்ளைக்கு தன்னுடைய தந்தையின் ஞாபகம் எவ்வளவு சுலபமாக எப்போதும் இருக்கிறதோ அதேபோல ஆத்மாவுக்கும் ஆத்மாவின் தந்தையான பரமாத்மாவை நினைப்பது மிகவும் சுலபமாக இருத்தல் வேண்டும். நான் ஓர் ஆத்மா, ஜோதிமய மான ஆத்மா, பரமாத்மா சிவனின் அழியாத குழந்தை ஆத்மா நான், என் தந்தை பரமாத்மா, பிரம்மலோகத் தில் வசிப்பவர், சாந்திக்கடல் அவர்; ஆனந்தக் கடல் அவர், அன்புக்கடல், சர்வ சக்தி வானும் அவரே அவருடைய குழந்தை நான் என்று எப்போதும் நினைக்க வேண்டும். இவ்வாறு நினைத்து பரமபிதா இருக்கும் பிரம்ம லோகத்தில் மனதை நிலைக்கச் செய்து பரமாத்மாவின் திவ்ய குணங்களையும் கடமைகளையும் சிந்தனை செய்ய வேண்டும்.

 

மனம் இப்படி நினைத்து நினைத்துப் பழகினால் உலக சம்பந்தங்களின் மீதும் பொருட்களின் மீதும் எந்தவிதமான கவர்ச்சியும் இருக்காது. பரமாத்மா வால் கற்பிக்கப்படும் ஞானத்தில் எவ்வளவு நம்பிக்கை ஏற்படுகிறதோ அந்த அளவிற்கு உலக சிந்தனையும் லௌகீக சம்பந்தங்களின் நினைவும் வராமல் இருக்கும். நம்முடைய உண்மையான சொரூபமும் பரமபிரியமான பரமாத்மாவின் குணங்களும் அனுபவ மாகும். மனமானது ஆண்டவனிடம் நிலைப்பதில்லை என்றும் யோகம் செய்ய முடியவில்லை என்றும் பலர் சொல்கிறார்கள். ஆத்மா என்பதில் நிச்சயம் இல்லாமை தான் இதற்கு காரணம் மின்சாரம் பாயவேண்டு மானால் ரப்பர் உறையை நீக்கி விட்டு, உள்ளிருக்கும் கம்பியுடன் அதேபோன்ற மற்ற கம்பியை இணைத்தால் தான் மின்சாரம் பாயும். ஆகவே தேகத்தின் மீதோ, தேகத்தை தரித்த தேகதாரி மனிதர்களிடத்தோ அன்றி தேவதைகள் மீதோ ஞாபகம் கொண்டு பரமாத்மாவை நினைத்தால் அவருடைய நெருங்கிய அனுபவம் கிடைக்காது.

இரண்டாவதாக பரமாத்மாவுக்குப் பெயரில்லை: உருவமில்லை: அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்  இதனால் அவர்கள் மனதை எந்த ஒரு நிலையிலும் நிலை நிறுத்த முடியாது. பரமாத்மாவின் திவ்யமான இருப்பிடமோ பரந்தாமம் அல்லது பிரம்மலோகம் என்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவ்விடத்தில் பரமாத்மாவிடம் மனதை நிலைக்கச் செய்ய முடியும்.

மூன்றாவதாக, பரமாத்மாவுக்கும் நமக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினைப் பற்றியும் அறியாமலிருப்பது. அதனால் அவரிடம் நெருங்கிய அன்பும் நட்பும் மக்களுக்குக் கிடையாது. இப்போது இவ் விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதால் பிரம்மலோக வசியான ஜோதிர்மய பிந்துவான  பரமபிரியமான பரமபிதா சிவனின் நினைவில் சதா நிலைத்திருக்க  முடியும்.

இராஜயோத்தின் தூண்களும் விதிகளும்

ஆத்மாவில் சாந்தி, ஆனந்தம், அன்பு தூய்மை, சக்தி மேலும் திவ்விய குணங்கள் நிறைய வேண்டும் என்பதற்காக ஆத்மாவை ஞானக் கடலும், சாந்திக்கடலும் ஆனந்தக் கடலும், அன்புக் கடலும் சர்வ சக்திவானும் பதீத பாவனருமான சிவபெருமானுடன் இணைப்பதே யோகத்தின் உண்மையான அர்த்தமாகும்.

மனதைச் சுத்தப்படுத்துவதும், எண்ணங்களை உயர்த்துவதும், மாற்றுவதும், மனம் எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் யோகத்தின் பலன் ஆனதால் யோகப் பயிற்சிக்கு சில விதிகளைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது. யோகத்தில் உயரவேண்டுமானால் அஸ்திவாரத்தூண்கள் பலமாக இருக்க வேண்டும்.

இவற்றில் பிரம்மச்சரியம், அல்லது தூய்மையே முதல் தூண் ஆகும். உடல் அழகு இந்திரிய சுகம் இவற்றிலிருந்து யோகியின் எண்ணம் நீங்கிவிடும். ஆத்மாவின் அழகுக்குத் தான் முதலிடம் கொடுப்பார். மனமானது பிரம்மத்தில் லயித்து ஆத்ம பற்றுதல் கொண்டு தேகப்பற்றுதலை மறந்து விடுவார். பிரம்மச்சரியம் என்பதில் உண்மை யாகவே நிலைத்திருப்பார். ஒவ்வொருவரையும் சகோதர சகோதரர்களாகக் கொண்டு ஆத்மீக அன்பிலும் நட்பிலும் இருந்து ஆனந்தமடைவார். நினைவினாலும் பிரம்மச்சரியத் தினாலும் உடலில் சக்தியும், செயலாற்றும் சக்தியும், ஆத்ம சக்தியும் கிடைக்கின்றன. மனோ பலத்தை அதிகரிக்கும் நிர்ணய சக்தியும் மனம் எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் சக்தியும் கிடைக்கின்றன.

இரண்டாவது சாத்வீக உணவு என்னும் தூண், உண்ணும் உணவிற்கேற்ப மனமும் புத்தியும் அமையும் .வயிற்றை வளர்ப்பதற்காக மற்ற பிராணிகளைக் கொன்று  மாமிசம் போன்றவற்றை உண்ண மாட்டார்கள்.  தகாத  வழிகளில் பணமும் சம்பாதிக்க மாட்டார்கள். மதுபானம், முட்டை, புகை பிடிப்பது, புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள். உணவை பகவானுக்கு உகந்ததாகத் தயாரித்து அவருக்கு அர்ப்பணித்துப் பின் அதைப் பிரசாதமாகக் கருதி உண்ணுவார்கள்; இதன் காரணமாக மனம் சுத்தமடைந்து எண்ணங் கள் சிறந்தவைகளாகவும் மற்றவர்களின் நன்மைக் கானதாகவும் அமைகிறது.

மூன்றாவது தூண் சத்சங்கமாகும். எவ்வாறு சேர்க்கையோ அவ்வாறே நடத்தை என்ற பழ மொழிக்கு ஏற்றவாறு யோகிகள் சத்லிசித் ஆனந்த சொரூபரான பரமாத்மாவுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்ற நினை விலேயே இருக்கிறார்கள். தகாத நண்பர்கள், கதைப் புத்தகங்கள் கெட்ட சிந்தனைகள் போன்றவற்றில் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அஞ்ஞானி களைப் பற்றியோ, மற்ற சம்பந்தங்களைப் பற்றியோ நினைக்காமல் பிரபுவின் நினைவில் மட்டுமே மூழ்கிக் கிடப்பவர் கள் ஞானிகள்.

நான்காவது திவ்ய குணங்கள் என்னும் தூண். திவ்விய குணங்களாலும் தெய்வீக சிந்தனை களாலும் கர்மங்களாலும் அகர்பத்தியைப் போல மணமெழுப்பிக் கொண்டிருப்பது யோகியின் தன்மை. அசுர சுபாவங்களையோ, அசுர கர்மங்களையோ பின்பற்ற மாட்டார்கள். பணிவு, ஆனந்தம், மலர்ந்த முகம், கம்பீரம், பொறுமை, உள்நோக்கு ஆகியவைகளே யோகத்தின் ஆதாரங்களாகும். இந்த நற்குணங் களை அடைந்து துன்பப்படும் மற்ற ஆத்மாக்களுக்கும் சாந்தி தேடித்தவிக்கும் ஆத்மாக்களுக்கும் தானே ஆதாரமாக இருக்கவும் செய்வார். உண்மையான யோகியானவர்  தன் குணங்களை பிறருக்கு தானம் செய்து  வாழ்க்கையில் நோய், சோகம், துன்பம், அமைதியின்மை போன்ற பூதங்களிலிருந்தும் விடுதலை அடைந்து சுகமாக வாழ்வார்.