இராஜயோகத்தினால் அடையும் அஷ்ட சக்திகள்

இராஜயோகத்தினால் மனமானது பரமபிதா பரமாத்மாவிடம் இணைந்து அழியாத சுகத்தையும் சாந்தியையும் அடைவதோடு, பலவிதமான ஆத்ம சக்திகளையும் அடைகிறது. அவற்றில் முக்கிய மானவை, எட்டு, அவை சிறந்தன என்பதோடு மகத்துவமும் வாய்ந்தவை.

கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தும் சக்தியே முதலாவது சக்தி. ஆமை தேவையானபோது கர்மேந்திரியங்களைப் பயன்படுத்தி மற்ற சமயத்தில் எப்படி கட்டுப்படுத்தி விடுகிறதோ அதைப்போலவே யோகியும் கூட தன்னுடைய கர்மேந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும் பிறகு முக்கிய தேவைகளின்போது அவற்றைப் பயன்படுத்தவும் எப்போதும் சாந்தி யுடனும் இருக்கவும் முடியும். எப்போதும் ஆத்ம அபிமானத்தில் இருப்பதால் மாயையின் எதிர்ப்பு இருக்காது.

இரண்டாவது அடக்கிக்கொள்ளும் சக்தி. இவ்வுலகம் ஒரு பயணிகளின் விடுதி என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் தம்முடைய வாழ்க்கையை விஸ்தரித்துக் கொண்டே இருந்து விடுகிறார்கள். தம்முடைய காரியங்களையும் புத்தியையும் சுறுக்கிக் கொள்ள இவர்களால் முடிவதில்லை. ஆனால் யோகி ஒருவருடைய புத்தியானது இப்பரந்த உலகில் அலையாமல் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவிடம் ஆத்ம சம்பந்தம் மட்டும் கொண்டு நினை வெல்லாம் அவரிடமே நிலைத்து விடுகிறது. இக்கலியுகத்திலிருந்து தம்முடைய (பெட்டி படுக்கைகள்) புத்தியையும் எண்ணங்களையும் அடக்கி  எப்போதும் தம்முடைய வீடான பரந்தாமத்திற்குச் செல்வதற்கு தயாராகிறார்.

 மூன்றாவது பொறுமை சக்தி. கல் எறிந்தாலும் இனிய பழத்தை ஒரு மரம் கொடுக்கிறது; அபகாரம் செய்பவர்க்கும் உபகாரம் செய்கிறது. அதைப்போல யோகியும் எப்போதும் அபகாரம் செய்பவர்க்கும் உபகாரம் செய்து நற்சிந்தனையும் நல்லெண்ணமும் கொண்டவராக இருப்பார்.

 

எதையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி என்பது நான்காவது சக்தி. மனிதனின் புத்தியானது யோகத் தினால் விசாலமடைகிறது. கம்பீரத்தையும் மதிப்பை யும் மரியாதையையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார். புகழ்ச்சியைக் கண்டு கர்வம் கொள்ளாமலும், குறை களைக் கண்டு துன்பப்படாமலும் இருப்பார். அவர் எப்பொழுதும் தெய்வீக குல மரியாதைகளில் கடல் போல் இருந்தும், தான் கம்பீரமாக இருந்தும் மற்ற ஆத்மாக்களின் குறைகளைக் காணாமல் குணங்களை மட்டுமே கண்டும் நடந்து கொள்வார்.

யோகத்தினால் கிடைக்கும் மற்றொரு சக்தி: பகுத்தறியும் சக்தி. பொற்கொல்லன் ஒருவன் நகைகளை கல்லில் உரைத்துப் பார்த்து உண்மை யையும் போலியையும் கண்டறிவது போல யோகி யாலும் மனிதர்களுடன் கூட இருந்து அவர்களிட முள்ள உண்மையையும் பொய்யையும் கண்டறிந்து கொள்ள முடியும். அஞ்ஞான மென்னும் பொய்யான கற்களிலிருந்து புத்தியை நீக்கி, ஞானரத்தினக் கற்களில் மட்டுமே தன் கவனத்தைத் திருப்புவார்.

யோகத்தினால் நிர்ணயிக்கும் சக்தியும் கூட தானாகவே கிடைக்கும் தகுந்தவற்றையும் தகாத வற்றையும் தானாக சீக்கிரத்தில் நிர்ணயிக்க முடியும். வீணான எண்ணங்களையும், மற்றவர்களைப் பற்றி அவதூறு பேசுவதையும் தவிர்த்து பிரபுவின் சிந்தனை யிலேயே இருப்பார்.

 யோகத்தினால் எதையும் சமாளிக்கும் சக்தியும் கூட கிடைக்கிறது. உற்றார் உறவினர்களின் மரணத்தின் போதும், உலகில் பிரச்சனைகள் என்னும் புயல் எழும்போதும் கலங்காமல் இருப்பதால் தம்முடைய ஆத்ம ஜோதியை எப்போதும் எரிப்பதனால் மற்ற ஆத்மாக்களுக்கு ஞான ஒளியைக் கொடுப்பார்.

ஒத்துழைக்கும் சக்தி அடுத்ததாகும். தன் உடல் உழைப்பு, மனம், செல்வம் ஆகியவற்றால் ஈஸ்வரிய சேவை செய்வதனால் மற்ற ஆத்மாக் களின் ஒத்துழைப்பும் தாமாகவே கிடைக்கும். துன்பம் நிறைந்த கலியுகமென்னும் மலையை அப்புறப்படுத்து வதற்காக தூயவாழ்க்கை வாழ்வது என்ற ரீதியில் விரல் கொடுத்து அவர்களும் சொர்க்க ஸ்தாபனம் என்னும் மலை போன்ற காரியத்திற்காக சகயோகிகளாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆவார்கள்.

இராஜயோகத்தின் யாத்திரை – சொர்க்கத்தை நோக்கிய பந்தயம்

இராஜயோகத்தை இடைவிடாமல் பழக்கப் படுத்திக்கொண்டால் ஒரு மனிதனுக்குப் பல சக்திகள் கிடைக்கின்றன. வரும் தடங்கல்களைப் பொருட்படுத்தாமல் ஆத்மீகத்துறையில் முன்னேறிச் செல்ல இச்சக்திகள் மிகவும் தேவை. இன்றைய மனிதனுக்குப்  பலவிதமான நோய்கள்; வருத்தங்கள்; சிந்தனைகள்; துன்பங்கள்; போன்றவை நேர்ந்து இச்சிருஷ்டியையே நரகமாக்கி விட்டுள்ளது. இந்த நரகத்திலிருந்து விடுபட்டு, சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமும் ஆகும். ஆனால் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குச் செல்லும் வழியிலோ பல கல்லும் முள்ளும் நிறைந்துள்ளன. காமம், கோபம், பாசம், பேராசை, அகங்காரம் போன்றவை தடைகளாக இருக்கின்றன. இப்புரு ஷோத்தம சங்கமயுகத்தில் ஞானக்கடலான சிவ பரமாத்மா பிரஜாபிதா பிரம்மா மூலம் கற்பிக்கும் எளிய இராஜயோகத்தை நடை முறையில் பின்பற்று வதால் இப்பஞ்ச விகாரங்களை வெல்ல முடியும்.

நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குப் போகும் வழியில் முதலில் காமவிகாரமென்னும் மதிற் சுவரைக் கடக்க வேண்டுமென்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகையாக இருக்கும்  காம விகாரத்திலிருந்து விடுபடுவதில் சிலர் வெற்றி அடைகிறார்கள். பலர் தேகப்பற்றினால் உந்தப்பட்டுக் கண்ணாடி மாளிகையில் மோதித் தூள்தூளாகிறார்கள். விகாரத்தில் விருப்பமும், எண்ணங்களும், பார்வைகளும் மதில் சுவரைக் கடக்கவிடாமல் செய்கின்றன. தூய்மையின் பார்வையினால் விகாரங்களை வெற்றி கொள்ளலாம்.

இரண்டாவது பயங்கரத்தடை, கோபம் என்னும் அக்னி சக்கரமாகும். கோபத்திற்கு வசப்படும் போது சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்கிறான்.  பொறாமை, பகைமை வெறுப்பு போன்றவையும் எழுகின்றன. இவற்றால் தானும் எரிந்து மற்றவர் களையும் எரித்துவிடுகிறான். இத்தடை களைக் கடக்க தான் சாந்தி சொரூபமான ஆத்மா என்று ஆத்மாவின் சுயதர்மத்தில் நிலைத்துவிட வேண்டும். சத்திய நெறியில் செல்லவிடாமல் தடுப்பது கோபமாகும். கருமித்தன முள்ளவராலும் மனதைப் பரமாத்மாவின் பக்கம் திருப்ப முடியாது. சாந்தியும், கிடைக்காது. சொர்க்கத்தை அடைய செல்வம் சேர்ப்பதில் இருக்கும் ஆசையை அறவே ஒழிக்க வேண்டும்.

பாசமென்பது ஒரு சிலந்தி வலை; பந்தபாசத்தில் ஈடுபட்டு மனிதன் தன்னுடைய தர்மத்தையும் கர்மத்தையும் மறந்து முயற்சி செய்யாமல் இருந்துவிடுகிறான் தேகத்தையும் தேக சம்பந்தங்களையும் மறந்து பாசவலையிலிருந்து  நீங்கி ஒரே ஒரு பரமாத்மாவின் நினைவில் இருந்து உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள் என்று கீதையில் பரமாத்மா நஷ்டமோகா, ஸ்மிருத்தி லப்தா என்ற வார்த்தைகளால் விளக்குகிறார். இதனால் சொர்க்கத்தைச் சேரலாம். மோகவலையிலிருந்து  விடுபட்டும் மற்ற மாயையின் பந்தங்களிலிருந்தும்  நீங்கினால்தான் சொர்க்கம் கிடைக்கும்.

மனிதனின் மூன்னேற்றத்திற்கு மலை போன்ற அடுத்த தடை அகங்காரமாகும். அகங்காரமுள்ள மனிதனால் கடவுளை நெருங்க முடியாது. உயர்ந்த மலையிலிருந்து  கீழே விழுந்து சுக்கல் சுக்கலாவது போல் மனிதன் அகங்காரத்தினால் வேதனைப் படுகிறான். இதையும் வெல்ல வேண்டும். விகாரங்களை விட்டொழித்தாலொழிய சொர்க்கம் கிடைக்காது என்பது நினைவிருக்கட்டும். இதை அறியாமல் யாராவது இறந்தால் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என எண்ணுவது தவறு. அங்ஙனம் இறந்தவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்குச் சென்று விட்டால் இங்கு ஜனத் தொகை குறைய  வேண்டும் அல்லவா? ஆனால் அப்படிக் குறையக் காணோமே.